×

ஃபிட் இந்தியா செயலி அமைச்சர் அனுராக் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: ஃபிட் இந்தியா இயக்கத்தின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தேசிய விளையாட்டு தினமான நேற்று ‘பிட் இந்தியா’ செல்போன் செயலியை ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தொடங்கி வைத்தார். மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், விளையாட்டுத்துறை இணையமைச்சர் நிஷித் பிரமனிக், விளையாட்டுத்துறை செயலர் ரவி மிட்டல், இளைஞர் விவகாரத்துறை செயலாளர் உஷா சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  முன்னதாக, ஸ்டேடிய வளாகத்தில் உள்ள ஹாக்கி நட்சத்திரம் மேஜர் தியான் சந்த் சிலைக்கு அமைச்சர்கள் இருவரும் மலரஞ்சலி செலுத்தினர். ஃபிட் இந்தியா செயலியை தொடங்கி வைத்தபின், அதன் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்த இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங், மல்யுத்த வீரர் சங்ராம் சிங், பத்திரிகையாளர் அயாஸ் மேமன், பைலட் கேப்டன் ஆனி திவ்யா, பள்ளி மாணவர் மற்றும் இல்லத்தரசி ஒருவருடன்  மத்திய அமைச்சர்கள் கணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர். தனது உடல்தகுதியை வெளிப்படுத்தும் வகையில், அமைச்சர் அனுராக் தாகூர் உற்சாகமாக ‘ஸ்கிப்பிங்’ விளையாடி அசத்தினார்.உடற்பயிற்சி செய்யும் நேரம், உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து, எடை குறைப்பு/அதிகரிப்பு, குடிக்கும் தண்ணீர் அளவு உள்பட பல்வேறு தகவல்களை சேமிக்கும், ஆலோசனைகள் வழங்கும் ஃபிட் இந்தியா செயலியை ஆங்கிலம் மற்றும் இந்தியில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அடிப்படை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பிரமனிக் பேசுகையில், ‘ஃபிட் இந்தியா இயக்கத்தை, மக்கள் இயக்கமாக்குவதில்,  நாட்டு மக்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது.  இந்த செயலி, புதிய இந்தியாவை உருவாக்கவும், பிரதமர் மோடியின் கனவை நனவாக்கவும் உதவும். ஃபிட் இந்தியா இயக்கத்துக்கு உண்மையான முன்னுதாரணமாக விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளார். அவர் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறார்’ என்றார்….

The post ஃபிட் இந்தியா செயலி அமைச்சர் அனுராக் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Fit India ,Anurak ,New Delhi ,Fit India Movement ,Bit India ,National Sports Day ,Minister ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...